search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள்"

    ராஜபாளையத்தில் நேற்று முதல் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #Powerloomworkersstrike

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விசைத் தறி கூடங்களில் சுமார் ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. சேலை உற்பத்தி செய்யும் இந்த தறிகளில் விசைத்தறி ஓட்டும் தொழிலாளர்கள், கண்டு போடும் தொழிலாளர்கள், பசை பட்டறை மற்றும் சாயப்பட்டறை தொழிலாளர்கள், பாவு பனைக்கும் தொழிலாளர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் போடப்படும். கடந்த 2014-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு காலாவதியாகி விட்டது. இதைத்தொடர்ந்து புதிய ஒப்பந்தம் குறித்து தொழிலாளர்கள் கேட்ட போது, ஜி.எஸ்.டி.யால் நூல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை காட்டி கூலி உயர்வு தர உற்பத்தியாளர்கள் மறுத்துள்ளனர்.

    எனவே தற்போது வரை பழைய கூலியே தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த வருடம் புதிய ஒப்பந்தம் கோரி, உற்பத்தியாளர்களிடம் கடந்த மாதம் மனு அளித்துள்ளனர். ஆனால் இது வரை உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து பதில் ஏதும் வரவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    எனவே தற்போதுள்ள விலைவாசி உயர்வால், தாங்கள் வாங்கும் ஊதியம் போதுமானதாக இல்லை என்பதால் ஊதிய உயர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் விலைவாசி உயர்வால் 50 சதவிகிதம் புதிய கூலி உயர்வு வழங்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முதல் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டதால் விசைத்தறி கூடங்கள் வெறிச்சோடியது. 2-வது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் நடந்தது.

    அரசும் மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர்கள் நலத்துறையும் தலையிட்டு தங்களின் கூலி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். #Powerloomworkersstrike

    ×